சூப்பர் ஸ்டார் ரஜினி அருணாசலம் படத்தில் நடித்த குரங்கு மரணம் |
அருணாசலம் படத்தில் ரஜினியின் வாழ்க்கையை வேறு விதமாக காட்டும் வகையில் குரங்கின் செயல்பாடு அமைந்திருந்தது. இந்த படத்தில் நடித்த குரங்கின் பெயர் ராமு. இதை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த நேரு என்பவர் வளர்த்து வந்தார். அவர் தான் சினிமாவுக்கும் கொடுத்தார்.
இந்த நிலையில் அவர் குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டதால் தன்னுடன் வளர்ந்த குரங்கு ராமுவை சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தார். கடந்த சில ஆண்டுகளாக இது வனத்துறையினரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தது.
தற்போது ராமு குரங்குக்கு 33 வயதாகிறது. இதனால் வயது முதிர்வின் காரணமாக இன்று காலை அது மரணம் அடைந்து விட்டது. இதையடுத்து அது சேலம் கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. இங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
பொதுவாக குரங்குகள் 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை தான் உயிர் வாழும். ஆனால் இந்த குரங்கு 33 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து இருக்கிறது. வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்ததால் அது உயிருடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.