|
‘‘விஜய் படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நண்பர் அல்ல’’ பட நிறுவனம் அறிக்கை |
‘‘விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தை தயாரிப்பவர், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர் அல்ல’’ என்று பட நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
‘கத்தி’
விஜய்–சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி‘ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்து வருகிறார். ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் கருணாமூர்த்தி, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள். படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 3–ந் தேதி கொல்கத்தாவில் தொடங்கி, ஐதராபாத், ராஜமுந்திரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இப்போது, சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
ராஜபக்சேவின் நண்பர்?
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுபாஷ்கரன், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர் என்று இணையதளங்களில் சில தகவல்கள் பரவின. இதுதொடர்பாக ஐங்கரன் கருணாமூர்த்தி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘‘நானும், சுபாஷ்கரனும் 30 வருடங்களுக்கு முன்பே இலங்கையை விட்டு வெளியேறியவர்கள். 27 வருடங்களாக நான் சினிமா தொழில் செய்து வருகிறேன். இலங்கை தமிழர்களான எங்களை வெளிநாடுகளில், ‘‘புலிகள்’’ என்றுதான் அழைக்கிறார்கள். வியாபாரத்துக்காக, ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப கட்டுப்பாட்டுடன் நாங்கள் தொழில் செய்து வருகிறோம்.