‘‘விஜய் படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நண்பர் அல்ல’’ பட நிறுவனம் அறிக்கை |
‘கத்தி’
விஜய்–சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி‘ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்து வருகிறார். ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் கருணாமூர்த்தி, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள். படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 3–ந் தேதி கொல்கத்தாவில் தொடங்கி, ஐதராபாத், ராஜமுந்திரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இப்போது, சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
ராஜபக்சேவின் நண்பர்?
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுபாஷ்கரன், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர் என்று இணையதளங்களில் சில தகவல்கள் பரவின. இதுதொடர்பாக ஐங்கரன் கருணாமூர்த்தி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘‘நானும், சுபாஷ்கரனும் 30 வருடங்களுக்கு முன்பே இலங்கையை விட்டு வெளியேறியவர்கள். 27 வருடங்களாக நான் சினிமா தொழில் செய்து வருகிறேன். இலங்கை தமிழர்களான எங்களை வெளிநாடுகளில், ‘‘புலிகள்’’ என்றுதான் அழைக்கிறார்கள். வியாபாரத்துக்காக, ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப கட்டுப்பாட்டுடன் நாங்கள் தொழில் செய்து வருகிறோம்.
இலங்கை தமிழர்
லைகா சுபாஷ்கரன், இலங்கையில் முல்லைத்தீவை சேர்ந்த தமிழர். அவருடைய அம்மா, முல்லைத்தீவை சேர்ந்தவர். அப்பா, திரிகோணமலையை சேர்ந்தவர். அவருக்கும், ராஜபக்சேவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 30 வருடங்களுக்கு முன்பே நாட்டை விட்டு வெளியேறிய சுபாஷ்கரன், கடந்த 2013–ம் ஆண்டு மே மாதம் தனது பூர்வீக பூமியை பார்ப்பதற்காக இலங்கைக்கு வந்தார். அவருடன் நானும் சென்றிருந்தேன்.
அப்போது 2 ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு முல்லைத்தீவு பகுதிகளை சுற்றிப் பார்த்தோம். மற்றபடி இலங்கை அரசாங்கத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தீபாவளி வெளியீடு
லைகா புரொடக்ஷன்ஸ், ஞானம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில், கரு.பழனியப்பன் டைரக்ஷனில் சேரன் நடித்த ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற படத்தை ஏற்கனவே தயாரித்து வெளியிட்டது.
‘கத்தி’ படத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். வருகிற தீபாவளி வெளியீடாக படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.’’
இவ்வாறு பட அதிபர் கருணாமூர்த்தி கூறினார்.